பெண் மொழி

பெண் மொழி என்றால் என்ன? இதன் வரி வடிவம் என்ன? இந்த மொழியின் பிரயோகத் தொனி என்ன?

பெண்ணுக்கென்று ஒரு மொழி இருக்கிறது. அவளுடைய ஆழ்மனதின் ஓட்டங்களை சின்ன, சின்ன கனவுகளை, நடைமுறை வாழ்க்கையை உள்ளது உள்ளபடி சொல்லிப் போகும் மொழி.அவளுடைய மனதின் மொழி.

எழுத்து, மனதோடு சம்பந்தப்பட்ட விஷயம்தானே.

மனசு நாளும் வளர்கிறது. விரிகிறது.

80 களுக்கு முன்னால் ஒரு சராசரி மத்திய தர வர்க்கத்து பிராமணப் பெண்ணின் வாழ்க்கை; 9 வது வகுப்பு வந்து விட்டால் கட்டாயம் தாவணி அணிய வேண்டும் என்று கட்டளை இட்ட பள்ளி; நெற்றியில் பொட்டில்லை என்றால் திட்டிய ஆசிரியர்கள்; முதுகு தெரியாதபடி ரவிக்கை அணிய வேண்டும் என்ற அம்மா; 6 மணிக்கு வீடு திரும்ப வேண்டும் என்ற அண்ணா; ஏதோ நான் மட்டும் இப்படி ஒடுக்கப்பட்டு இருந்தால் எதிர்க்க தோன்றி இருக்கும். சுற்றி உள்ள என் வயதுப் பெண்கள் எல்லோரும் இப்படித்தான் வளர்க்கப்பட்டு வாழ்ந்து கொண்டிருந்ததால் பெரிதாக எதிர்க்க தோன்றவில்லை. உண்மையிலேயே ஆண்கள் என்றால் இப்படிதான் இருக்கணும், பெண்கள்னா இப்படிதான் இருக்கணும் இதுதான் இயல்பு என்று மனது எண்ணியது. முந்தின நாள் வரையிலும், கூட பழகின ஆண் நண்பனை மனது காதலனாக வரித்து கொண்ட பின், அதுவரை ‘நீ’ என்று விளிக்கப்பட்டவனை ‘நீங்கள்’ என்று சொல்ல வைத்தது.

அண்ணாக்கள் நடராஜ் ,வைத்தி அறிமுகப்படுத்திய நல்ல இலக்கியம், நவீன நாடகம், பிலிம் சொசைட்டி சினிமாக்கள், கொஞ்சம் கொஞ்சமாக மனதை விசாலப்படுத்த தொடங்கின. நகை, புடவை, அலங்காரம் போன்ற தனி மனித ரசனைகளை தாண்டி உலகம் பிடிபட ஆரம்பித்தது.

எப்படி வாழ்வது என்பது பற்றிய கேள்விகள் தோன்றின. ஒரு நல்ல டாக்டர், என்ஜீனியர் பையனை கல்யாணம் செய்து கொண்டு ‘‘குடும்பப் பாங்கான’’ மனைவியாக குப்பை கொட்ட முடியாது என்று தோன்றியது. என்னளவில் எதையாவது சாதிக்க வேண்டும்; உயர, உயர பறக்க வேண்டும் என்ற வெறியும் வரவில்லை. ஆனால் கனவுகள் உண்டு.

நான் எப்பொழுதும் கனவு காண்கிறவள். தினம் கனவுகள் வந்து போயின. ஆனால் நிதர்சனமும் முகத்தில் அறைந்தது. நிதர்சனங்களையே கனவுகள் ஆக்கிக் கொள்ளும் சமரச பாவமும், கனவுகளை நிதர்சனங்களாக்க முயன்ற வேகமும் மாறி மாறி அலைக்கழித்தன.

இந்த சமயத்தில் ஞாநியின் சந்திப்பும், பேச்சும், சிந்தனைகளும் மனதைப் பெரிதாக கவர்ந்தன. பாதித்தன. ஏதோ நல்லது செய்ய எண்ணுகிற ஆள் என்பது பிடிபட்டது. நேரடியாக செயல்களில் இறங்குகின்ற மனப்பக்குவமும் தைரியமும் எனக்கு இல்லாது போனாலும் கூட இந்த ஆளோடு சேர்ந்து வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ளலாம் என்ற எண்ணம் வந்தது.

நான் இன்றைக்கு என்னவாக இருக்கிறேனோ அதற்கு ஞாநிக்கு பெரிய பங்குண்டு. தாலி தேவையா, தேவையில்லையா என்பதை பற்றிய பெரிய அபிப்ராயங்கள் இல்லாத நிலையில் தாலி எப்படி ஒரு அடிமைச் சின்னம் என்பதை ஞாநி உணர்த்திய விதம் சரியென்று பட்டது.

சமூகம் பற்றிய மாற்றுச் சிந்தனைகள், சமூக அக்கறை, பெண்ணடிமைத்தனம் போன்றவை பற்றி ஞாநி சொன்ன தொனியில் கோஷம் இல்லை. இதை நீ ஏற்றுக் கொள் என்ற கட்டாயத் தொனியும் இல்லை. ஒரு சராசரி பெண்ணை இந்த விஷயங்களுக்கு அவர் அறிமுகப்படுத்திய விதம், வெகு அருமை. முழு மன ஒப்புதலோடு சிந்தனைகளை ஏற்றுக் கொள்ள முடிந்தது. மனதின் அலைக்கழிப்பு ஒரு நிலைக்கு வந்தாற் போலிருந்தது. பயணிக்க வேண்டிய வாழ்க்கைப் பாதை பிடிபட்டது. திருமணத்திற்குப் பிறகு ஞாநியின் மூலம் வெவ்வேறான மனிதர்களோடு தொடர்பு கிடைத்தது, பல்வேறு பெண்கள் அமைப்புகள், ஈழத்து போராளிகள், கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக குரல் கொடுத்த அமைப்புகள், அமைப்புகளைச் சாராது சமூகத்தின் மீது அக்கறையும், மனிதர்கள் பால் பரிவும் கொண்ட தனி நபர்கள் என இவர்களுடனான சந்திப்பு என் உலகில் புது அர்த்தங்களை கொடுத்தது.

உண்மையில் சொல்லப் போனால், இந்தக் காலத்தில் படித்து அறிந்ததை விட பழகி அறிந்ததும், பேசி அறிந்ததும்தான் அதிகம்.

ஆனால் சமயங்களில் தேடலும் வேகமும் இருந்த அளவுக்கு, அந்த கால கட்டத்தில் விவேகம் இல்லாமல் போயிற்றோ என்று இப்பொழுது யோசித்துப் பார்த்தால் தோன்றுகிறது.

சுறுசுறுவென்று எல்லாவற்றுக்கும் கோபம் வரும். கூட இருப்பவர்களின் சின்ன வார்த்தைப் பிசிறுக்குக் கூட சண்டை பிடித்த காலகட்டம்.

ஞாநி உட்பட எல்லா ஆண் தோழர்களிடமும் பெரிய பரிவும் பாசமும், நேசமும் இருந்தது. ஆனால் அவர்கள் செய்கைகளில் சின்னதாக பிசிறு இருப்பதாக மனசு உணர்ந்தால் கூட ஹே, ஆம்பளைத்தனத்தைக் காட்டாதே என்று சண்டை பிடித்ததுண்டு. சண்டைகளுக்குப் பிறகும் மனசின் நேசம் சமாதானத்துக்கு வழி வகுத்தது. உறவுகளுக்குள்ளான புரிதலை ஆழப்படுத்தியது. நாளும், நாளும் புதுப்புது பரிமாணங்களை கண்டு கொள்ள முடியாத உறவு வளர முடியுமா? இல்லை உடன் தொடரத்தான் முடியுமா? புரிதல் இல்லாமல் வளர முடியாமல் போன உறவுகளும் உண்டு. அவை பற்றி பெரிய வருத்தமில்லை.

எதிராளியின் சின்ன முக மாறுதலில், பிசிறான வார்த்தையில் அடிபட்டு குன்றிப் போகும் மனது என்னுடையது. இந்த சுபாவத்திற்கு பெரிதாக எந்தக் குழுவிலும் இணைந்து முழுமையாக இயங்குவது சாத்தியமில்லை என்றே பட்டது.

வெவ்வேறு பெண்கள் அமைப்புகளோடு அவ்வப்போது என்னால் முடிந்த அளவில் வேலை செய்யலாம் என்று பட்டது.

பல்வேறுபட்ட பெண்களைச் சந்தித்தது பெண்கள் தொடர்பான என் கேள்விகளை அதிகப்படுத்தியது.

பெண்கள் பிரச்சனைக்கு காரணம் யார்? பெண்கள் என்னவிதமான பிரச்சனைகளை எதிர் கொள்கிறார்கள்? இதெல்லாம் எப்படி மாறும்? பெண் தொடர்பான விஷயங்களில் எந்த மாதிரியான சிந்தனைப் போக்கு சரி? எது ஆபத்தானது? எது நிராகரிக்கப்படவேண்டியது? பிரச்சனைகளை எந்த கோணத்திலிருந்து அணுகுவது?

இப்படியான கேள்விகள். இந்த சமயத்தில் பெங்களூர் விமோசனா பெண்கள் அமைப்புடனான தொடர்பு, குறிப்பாக செலினுடன் நெருக்கமானது. ஸ்ரீலேகா பெண்கள் புத்தக மையத்திலிருந்து புத்தகங்கள் படிக்கக் கிடைத்தன. இந்தியப் பெண்கள் மட்டுமல்ல. முன்னேறியுள்ள நாடுகளிலும் கூட பெண்களின் வாழ்க்கை இரண்டாம் தர பிரஜை நிலைதான் என்பதும் அடக்குமுறையின் வடிவம் தான் வெவ்வேறாக இருக்கின்றன என்பதும் தெளிவாக பிடிபட்டது.

உலகின் பல்வேறு தரப்பட்ட பெண்களை நேரடியாக சந்தித்து உரையாடியது பற்றி செலின் பகிர்ந்து கொண்டதும், செலின், அஜீதா மாதிரியான பலரும் பெண்கள் தொடர்பான செயல்பாடுகளில் தங்களை இணைத்துக் கொண்டு தீவிரமாக பணியாற்றியதும் பெரிய உந்துதலாக அமைந்தது.

தாயாய் ஒரு குழந்தையின் வளர்ச்சிக்குப் பொறுப்பேற்றது இன்னும் மனதைப் பண்படுத்தியது. தாய்மை உன்னதமான விஷயமாகப் பட்டது. ஆனால் கூடவே பெண்ணுக்கு தாய்மைதான் அழகு என்ற பழைமைவாதக் கொடி பிடித்து, பெண்ணுக்கு கிரீடம் சூட்டிய பொழுதெல்லாம் மூர்க்கமாக எதிர்க்கத் தோன்றியது ‘‘தாய்மை என்பது உணர்வு மட்டுமே’’ என்று உரக்க குரல் கொடுக்க வைத்தது.

தாய்மை உணர்வோடு வாழ்வதற்கும், தாய்மை கிரீடத்தை சுமப்பதற்குமான வேறுபாட்டை எனக்குத் தெளிவு படுத்தியதில் மீனா சுவாமிநாதனுக்கும் பங்குண்டு. குழந்தைகளின் தேவைகளைப் பற்றி பேசும்பொழுது பெண்களின் பிரச்சனையை வெளிப்படுத்தவும், பெண்களின் வாழ்க்கையைப் பற்றி பேசும் பொழுது, குழந்தைகளின் மீதான பரிவையும் நேசத்தையும் உள்ளடக்கி பேசவும் கற்றுக் கொடுத்தது மீனாதான். அதே போல் பெண்களின் போராட்டம் சமூகத்தின் சலுகைகளைப் பெற அல்ல. அவர்களுக்கான அடிப்படை உரிமைகளைப் பெற என்ற பார்வையை உறுதிப்படுத்தியதும் மீனாதான்.

வாய்ப்புகள் கிடைத்த பத்திரிகைகளில் எல்லாம் பெண் தொடர்பான செய்திகளைத் தொடர்ந்து எழுத எழுத ஒரு பலம் வந்தது.

தமிழில் பெண் தொடர்பான விஷயங்களை வெளியிடுவதில் எத்தகைய பத்திரிகை சூழல் நிலவியது?

13 வருடங்களாக தினமணி, தினமணி கதிர், சுபமங்களா, குங்குமம், ஆனந்த விகடன், ஜூனியர் விகடன், சுட்டி விகடன் என வெவ்வேறு பத்திரிகைகளில் எழுதி வந்திருக்கிறேன். விகடனில் 3 வருடங்கள் முழு நேரமாகவும் பணியாற்றி உள்ளேன். ஆரம்பத்திலிருந்தே பெண்கள், குழந்தைகள் தொடர்பாக எழுதுவது பற்றிய தீர்மானத்தில் இருந்ததால், எதை எழுதுவது என்பது பற்றிய அவ்வப் பொழுதைய உளைச்சல்கள் இல்லை.

பெண்கள் தொடர்பான பற்றி எரியும் செய்திகளை பரபரப்பாக எழுதும் பத்திரிகையாளர் பாணியும் பிடிக்கவில்லை. மறுபுறம் கோலம், சமையல், அலங்காரம், பிரபல பெண்களுடன் அவர்களுக்கு பிடித்த முறையில் பேட்டி போன்றவற்றையும் எழுத முடியவில்லை.

ஆனால் எழுத இடம் பிடிப்பது ஒருபுறம் சிக்கல் என்றால், எழுதியதில் நாம் எழுதிய தொனியை கடைசிவரை காப்பாற்றுவது பெரிய சிக்கலாக இருந்தது. முழு நேரப் பணியாளராக இருந்த பொழுது எழுதிய கட்டுரையை அச்சேறுவதற்கு முன் வரை பார்க்க முடிந்தது என்றாலும் ஓயாமல் மேலே இருந்தவர்களோடு சண்டை போடுவதில் போய் முடிந்தது.

துணை ஆசிரியராக கிடைத்த அதிகாரத்தை பயன்படுத்தி என் கட்டுரையை மாற்றி எழுதினார்கள். நான் சரி என்று நம்பிய வரிகளை வெட்டினார்கள். காரணம் பெண்ணுக்கென்று ஒரு மொழி உண்டு என்ற வாதத்தை ஏற்றுக் கொள்வதில் பலருக்கு சிக்கல் இருந்ததுதான்.

பெண்ணே புறப்படு என்ற கோஷமும் முடியாது. ஐயோ, பாவம் பெண் என்ற பச்சாதாபப்படவும் முடியாது. இதைத் தாண்டி பெண்களை பற்றி யோசிக்க வேண்டி இருக்கிறது. ஒடுக்கப்பட்ட ஒவ்வொரு பெண்ணுக்கும் பின்னால் ஒரு சரித்திரம் இருக்கிறது. காலம் காலமாக அவள் மற்றவர்கள் சொல்லியபடி சிந்தித்து வந்திருக்கிறாள். அவர்கள் சொல்லிக் கொடுத்த வார்த்தைகளைக் கொண்டு அவர்கள் மொழியிலேயே பேசி வந்திருக்கிறாள்.

ஆனால் இப்பொழுது அவள் தானாக சிந்திக்க ஆரம்பித்திருக்கிறாள். அவள் சிந்தனைக்கு சொல் வடிவம் கொடுக்க ஏற்கனவே புழக்கத்தில் உள்ள சொற்களை அப்படியே பிரயோகிக்க முடியாது. அவள் உள்ளுக்குள் உறைந்து கிடந்த மொழியைச் செதுக்கி, செதுக்கி அவளால் தான் வெளியே வடிக்க முடியும்.

மொழி என்பது வெறும் எழுத்துக்களால், சொற்களால், வார்த்தைகளால் ஆனது மட்டுமல்ல. மொழிக்கு உணர்வு உண்டு. என் மொழியின் உணர்வை புரிய வைக்கத்தான் சிறு அறிமுகம் எழுத நேர்ந்தது.

பெண்ணுக்கென்று ஒரு மொழி இருக்கிறது.

அதிகார வேட்கை தொனிக்காத மொழி; அலங்கார வார்த்தைகள் அற்ற மொழி;

எழுதுபவர் தன்னைத் தம்பட்டம் அடித்துக் கொள்ளாத மொழி; வெற்றுக் கோஷங்களை எழுப்பாத மொழி;

இதற்கெல்லாம் மேல் பச்சாதாபத்தை இறைஞ்சாத மொழி; அவளுடைய மனதின் மொழி;

இப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது.

13 வருடங்களாக இப்படித்தான் எழுத முயற்சித்துக் கொண்டே இருக்கிறேன்.

இந்த முயற்சியைப் புரிந்து கொண்டு தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்ட சில வாசகர்களும், இனியும் பகிரப் போகிறவர்களுக்கும் இந்தத் தருணத்தில் என் நன்றி.

மார்ச் 2001